Skip to main content

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?


பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?  


இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது.

மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வினைகளைக் கடந்து, வினையற்ற நிலைக்குப் போகத் துடிக்கிறான். எனவே வினைகள் விரைவு பெற்று வந்து அழுத்துகின்றன. மனம் தளராமல் நம்பிக்கையோடு எதிர் கொள்பவனை தெய்வம் கை விடுவதில்லை. சோதனைகள் சூழ்ந்தழுத்தும் பொழுது இறையருள் அவனுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் நின்று நல்வழிப்படுத்துகிறது. ஆனால், அவநம்பிக்கை கொண்டாலோ தெய்வ அருளை அவன் அடைய முடியாமல் போய் விடுகிறது. இதற்குப் புராணங்களில் பல உதாரணக் கதைகள் உண்டு.

பொதுவாகவே அவரவர் வினைகளின் விளைவைத்தான் அவரவர் அனுபவிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் காப்பாற்ற மாட்டாரா ? கேள்வி எழும். நிச்சயமாகக் கடவுள் காப்பாற்றுவார். ஆனால் அதற்குத் தகுதியானவர்களாக நம்மை நாம் திருத்தியமைத்துக் கொள்வது அவசியம். முதலில் நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை நாம் உணர வேண்டும். புற வழிபாடுகளால் மகிழ்ந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணிக் கொள்வது அறியாமையே. நாம் மேலும் மேலும் பாவங்களைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொண்டே போக, கடவுள் நம்மைக் காக்கவில்லையே என்று கருதுவது கள்ளத் தனமாகும்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோடு கடவுளையே ஏமாற்றும் கயமைத் தனமாகும் அது. இத்தகைய குரங்கு மனதின் கள்ளத்தனங்களுக்கு ஞானிகளும் விதி விலக்கல்ல. இந்த மனதின் மாயப் பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அவர்கள் பாடல்களைப் படிக்கும் பொழுதே தெரிகிறது. இதனால்தான் மனதைக் குரங்கு என்றும், மதம் பிடித்த யானை என்றும், காட்டுக்கடங்கா குதிரை என்றும், காட்டாற்று வெள்ளமென்றும் பலவாறாக உதாரணப் படுத்திப் பேசுகிறார்கள்.

வள்ளல் மணிவண்ணனே என்றென்றேயுனையும் வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன், - நம்மாழ்வார்.

கள்ள மனம் துள்ளும், தன்னுள்ளம் தனையே தின்னும். - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
- பத்ரகிரியார்.

கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
கள்ளமெத் தனையுள்ளசற்
காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை ?
- தாயுமானவர்.

இப்படி மனதின் கள்ளத் தனத்தைக் குறித்து எல்லோருமே பாடியிருக்கிறார்கள். இந்த மனம் என்பது கண்ணாடிக்கு ஒப்பானது. பரிபக்குவம் அடைந்த மனம் தூய கண்ணாடியை ஒத்தது. அழுக்கில்லாத, வளைவுகள் இல்லாத கண்ணாடி மறுபுறத்தில் உள்ளவற்றைத் தெளிவாக, உள்ளதை உள்ளபடி காட்டும். அழுக்கடைந்த, வளைந்து, நெளிந்த கண்ணாடி மறுபுறத்தில் உள்ள பொருட்களை உள்ளபடி காட்டாது. இந்த மனம் என்ற கண்ணாடியின் மூலம்தான் ஆன்மாவானது புறத்திலுள்ள உலகைப் பொருள் படுத்துகிறது.

மனதில் கள்ளத்தனம் என்கிற குறைபாடு இருப்பதால் புறவுலகமும் அதற்கேற்றபடி குறைபாடு உள்ளதாகத் தோன்றுகிறது. எனவே மனதை மாசற்றதாக மாற்றியமைக்க வேண்டியது தலையாய கடமையாக இருக்கிறது. திருத்தி அமைத்தவன் மேலோனாகிறான். கள்ளத் தனம் என்கிற மாசு படியும்படி விட்டு விடுகிறவன் கீழ்மையடைகிறான். கெட்டுப் போன மனது பிறர் கூறும் நல் உபதேசங்களை ஏற்றுக் கொள்ளாது. நல்ல விஷயங்களைக் கூறினாலும் அதைப் பொலாங்காகப் பொருட்படுத்துவது சிறுமதி படைத்தவர்களின் இயல்பாகும்.

கல்வியிலும், கேள்வியிலும் மேன்மையுற்று இருப்பவர்களுக்கே நல்ல காரியங்களை எடுத்துச் சொல்லும் பொழுது, அவர்கள் மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. வாலி கல்வி, கேள்விகளிலும், தவத்திலும் சிறந்தவன்தான் என்றாலும் கூட அவன் மனதில் ஆசையும், காமமும் கள்ள தனத்தை ஏற்படுத்தி விட்டன. உடன் பிறந்தவனோடு பிணக்கம் வேண்டாம் என்றும், தம்பியோடு போர் புரிய வேண்டாம், தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது என்றும் மனைவி தாரை எடுத்துக் கூறிய பொழுது அவன் கள்ள மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராமனின் அம்பு இதயத்தில் புகுந்த பிறகுதான் கள்ளத் தனங்கள் மனதினின்று விலகி நல்லறிவு அவனுக்கு ஏற்பட்டது.

துரியோதனனின் கூடவே இருந்து கொண்டு, தக்க சமயங்களில் எல்லாம் நல்லுபதேசங்களை பீஷ்மர் கூறினாலும் கூட அவன் கள்ள மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சகுணியின் சூழ்ச்சி வலையில்தான் வீழ்ந்தான். வேறு எத்தனையோ நற்குணங்களைப் பெற்றிருந்த போதிலும் சகோதரர்களிடத்தில் அதாவது பங்காளிகளை வெறுத்தல் எனும் துர்குணத்தால் அவன் மனம் முழுவதும் கள்ளம் புகுந்து விட்டது. சில நேரங்களில் பக்தர்களுக்கும் கூட இறைவன் இல்லையோ என்கிற சந்தேகம் வந்து விடும். கடவுள் இருந்தால் தனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் வருகின்றது ? நாம் யாருக்கும் தீங்கு செய்யவே இல்லையே ? என்று தோன்றுகிறது. கடவுளே இல்லை என்று நம்புகிறவனுக்கு ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வரக் கூடும். ஆனால், கடவுள் இருக்கிறார் என்று முழுமையாக நம்புகிறவர்களுக்கு இந்த சந்தேகம் வரலாமா ?

ஆனாலும், வினைகளின் பரியந்தம் அனுபவிக்கும் துன்பத்தின் வெம்மை தாளாமல் அந்நிலை வந்து விடுகிறது. என்றாலும், அவர்கள் கடவுளை. வள்ளலே, மணி வண்ணா என்று வெளியே சொல்லிக் கொள்வார்கள். இந்தக் கள்ளத் தனமெல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ? தானும் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகச் சொல்லி ''உன்னை உண்மையான அன்போடு வேண்டாமல், வெளி வேசமாக, அவநம்பிக்கையோடு, கள்ள மனத்தோடு புகழ்ந்து என்னை நானே ஏமாற்றிப் கொண்டேன். பிறகு என் கள்ள மனதை பக்குவப்படுத்தி, திருத்திக் கொண்டதால் உன்னைக்(உண்மையை) கண்டு கொண்டேன். இனி உன்னை விடமாட்டேன்" என்று நம்மாழ்வார் சொல்கிறார்.

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே. - திருமந்திரம்.

மனதின் வசப்பட்ட இந்த உடலில் மூலாதாரம் முதலாகச் சகஸ்ராரம் வரை ஏழு தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்க இவ்வாதாரங்களில் பொருந்தி தியானித்து சந்திர அமுதமெனும் ஞான தீர்தத்தை அருந்த மாட்டாமல் பூமியில் பள்ளத்திலும், மலை மேட்டிலுள்ள சுனைகளையும் தேடி அலைவார்கள் கல்வியறிவு இல்லாத கள்ள மனம் படைத்தவர்கள் என்கிறார் திருமூலர். எத்தனை எத்தனையோ நூல்களைப் படித்து என்ன பயன் ? அவற்றால் மனமானது பரிபக்குவம் அடைவது இல்லையே ? கடவுள் ஒருவரே மெய்ப் பொருள் மற்ற அனைத்தும் நிலையற்றவை என்கிற பேருண்மையை கற்று, அறிந்து உணர்ந்தவனே கல்வி கற்றவனாவான். மற்றவரெல்லாம் கல்லாத கள்ள மனம் படைத்தவரே என்பது உட்கருத்து.

நம் உள்ளத்திலேயே இறைவன் உறைந்திருக்க, அதை நாம் அறியாமல் போவதின் காரணமென்ன ? கள்ள மனம்தான் காரணம். பக்தி கொள்கிறோம், தவம் செய்கிறோம் எனினும், அவ்வப்போது உலகாய தேவைகளுக்காக பாவங்களையும் செய்கிறோம். நாம் பக்தி கொள்வதால், தவம் செய்வதால் நம் பாவங்களை இறைவன் கண்டு கொள்ள மாட்டார் என்று எண்ணிக் கொள்கிறோம். அப்படியே இறைவன் தெரிந்து கொண்டாலும் நம்மை மன்னித்து விடுவார் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். இதுதான் கள்ள மனம். சத் காரியங்களுக்கு விரோதமாக நடந்து கொள்பவர்களை இறைவனே கூட காப்பாற்ற முடியாது.

ஒருவன் அறியாமை எனும் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்ததால் பாவம் செய்தான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மனம் திருந்தி இறைவனிடம் மன்றாடும் பொழுது அதை அவர் மன்னிக்கக் கூடும். மன்னித்தால்தான் அவர் இறைவன். ஆனால், பக்தி, தவம் முதலியவற்றைச் செய்கிற ஒருவன் தெரிந்தே பாவங்களைச் செய்யும் பொழுது இறைவன் எப்படி அதை மன்னிப்பார் ? எனவே மனதில் உள்ள கள்ளத் தனங்கள் அனைத்தும் மறைந்து போகின்ற அளவுக்குத்தான் ஒருவன் தன் உள்ளத்தில் உறையும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

கள்ளத் தனங்களை மனதில் வளர்த்துக் கொண்டே பக்தி செய்பவன் ஒரு நாளும் இறையருளுக்குப் பாத்திரமாக முடியாது. இதையே, ''கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம் ?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம் ? '' என்று பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பல் மூழமாகச் சூக்குமமாகச் சொல்லுகிறார். எனவே நான் பக்தி செலுத்துகிறேன், தியானம் செய்கிறேன் ஆனால், எனக்கு துன்பங்களே தொடர் கதையாக இருக்கிறது என்று சொல்பவர்கள் முதலில் தன் மனதின் கள்ளத் தனங்களை வேரறுக்க வேண்டும். எல்லா பாவங்களையும் செய்வதோடு, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து கொண்டு, பக்தியும், தியானமும் செய்வதால் யாதொரு பயனுமில்லை. இதுவே கள்ள மனதின் அடையாளம்.

இவர்களுக்கு கடவுளே இல்லை என்று சொல்கிற அஞ்ஞானி எவ்வளவோ மேல். தெரிந்தே பாவங்களைச் செய்கிற கள்ள மனம் படைத்தவர்களை எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டார். அவர்களுக்குத்தான் பல கடவுள்கள். கள்ள மனம் அற்றவர்களுக்கு கடவுள் ஒருவரே. அவர்களை எந்தப் பாவமும் பற்றுவதில்லை, அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேர்வதில்லை, அவர்களை கடவுள் வந்துக் காப்பாற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் அவர்களும் கடவுளும் வேறல்ல.

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...